புனேயிலிருந்து ஊருக்கு நான்கு நாட்கள் விடுமுறையில் செல்வது என்று முடிவெடுத்தவுடனேயே மலிவான விமானச்சீட்டு தேடும் படலம் தொடங்கி விட்டது. புனேயிலிருந்து சென்னைக்கு தற்போது நேரடி விமான
சேவையில்லை, பெங்களூரூ வழியாக செல்லலாம், ரூ 9000 பயணக் கட்டணம் திரும்ப வருவதற்கும் சேர்த்து, கிங்பிஷர் ஏர்வேசில் (இதனை தமிழ்ப் படுத்தினால் எப்படி இருக்கும், கிங்பிஷர் - அரச மீன் பிடிப்பவர் :-)). ஜெட் ஏர்வேசில் ரூ 10000 ஆகிறது. சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு 6 மணிநேரம் பயணம் செய்ய வேண்டும்.
ஆனால்
புனே - பெங்களூரூ விமானக் கட்டணம் ரூ 3750 மட்டும்தான் (திரும்ப வருவதற்கும் சேர்த்து). ரீடிப் கட்டணதேடுதல் இணையத்தில் தேடி ஒருவழியாக இண்டிகோ விமானத்தில் பதிவு செய்து விட்டேன். பெங்களூரூ - கும்பகோணம் 10 மணிநேரப் பயணம், பரவாயில்லை பேருந்தில் பயணிக்கலாம் என்று முடிவாகி விட்டது.
புனேயிலிருந்து மாலை 5:25க்கு விமானம் கிளம்பியது.
இண்டிகோ விமானச் சேவை பரவாயில்லை, டிக்கெட் குளறுபடிகளில்லை. இணையத்தளமும் நன்றாக, எளிமையாக உள்ளது. பயணத்தின் போது கொஞ்சம் விமானம் ஆட்டம் காட்டினாலும், சரியாக இரவு 7 மணிக்கு கொண்டு சேர்த்து விடுகிறார்கள் :-)
பெங்களூரூவிற்கு இதுவரை வந்ததில்லை.
தேசிகன் வலைப்பக்களிலும்(பெண்களூர்), மற்ற வலைப்பதிவர்களின் வலைப்பக்கங்களிலும், செய்தி ஊடகங்களில் ஊரைப் பற்றி கேள்விப் பட்டதை தவிர வேறு அனுபவமில்லை. பரவாயில்லை, ஊர் நன்றாகத்தான் இருக்கிறது.
பெங்களூரூ விமானநிலையம் ஓரளவுக்கு சுத்தமாக உள்ளது. என்னை ஆச்சரியப் படுத்தியது இதுவல்ல, வெளியே வந்தவுடன் மெஜஸ்டிக்(கேம்ப்கவுடா) பேருந்து நிலையம் செல்வதற்கு ஆட்டோவைத் தேடினேன். ஆட்டோவிற்கான வரிசை முன்பு, ஒரு போலிஸ் கான்ஸ்டபிள் நின்று கொண்டு பயணிகளின் பெயர், செல்லுமிடம், செல்பேசி எண்ணை,
ஆட்டோ எண்ணை குறித்துக் கொண்டு வழியனுப்பி வைக்கிறார். அற்புதமான ஏற்பாடு. ஊர் தெரியாது புதிதாக வருபவர்களுக்கு இது பயனுள்ளது.
பெங்களூரூவில் சாலைகள் நன்றாக உள்ளன. ஓரளவுக்கு ஊரே சுத்தமாக உள்ளது (மும்பை, புனேவை ஒப்பிடும்போது).ஆட்டோகாரர் மீட்டர் போட்டு, 74 ரூபாய் (மீட்டர் சார்ஜ்) வாங்கிக் கொண்டு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டார். ஆனால் டிராபிக் ரொம்பவும் அதிகம். விமான நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு 75 நிமிடத்திற்கு மேலாகி விட்டது (12 கிமீ மட்டுமே என்று நினைக்கிறேன்).
நான் பார்த்த வரையில்
தமிழர்கள் நிறைய பேர் தென்பட்டனர். தமிழ் பத்திரிக்கைகளையும், செய்தித் தாள்களையும் கூட பார்க்க முடிந்தது. மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் இரவு 8:30க்கு கே.எஸ்.ஆர்.டி.சி ஏசி வசதிப் பேருந்து கும்பகோணத்திற்கு கிளம்புகிறது. ரூ 363 பயணக் கட்டணம். பேருந்து சுத்தமாக, வசதியாக உள்ளது. டிவி தொல்லை இல்லை. போர்த்திக் கொள்ள போர்வை, தண்ணீர் பாட்டில், முகம் துடைக்க டிஸ்யூ பேப்பர் போன்றவற்றை கொடுக்கின்றனர்.
சற்று கண்ணயர்ந்தால் 11 மணியளவில் கிருஷ்ணகிரி, காலை 5 மணிக்கு திருச்சி, 7 மணிக்கு கும்பகோணத்தில் கொண்டு சேர்த்து விடுகின்றனர். இவ்வண்டியைத் தவிர கேபிஎன் பேருந்தும் இருக்கிறது.
மூன்று நாட்கள் ஊரில் இருந்து விட்டு, திரும்பவும் கும்பகோணத்திலிருந்து, பெங்களூரூ. அங்கிருந்து புனே வந்து சேர்ந்து நண்பர்களிடம்
'அதிருதுல்ல....' என்றேன்!