Wednesday, January 18, 2006

சோம்பேறி பையனுக்கு கவிதை எழுத தெரியுமா ?

நமக்கு கல்லூரி காலத்திலிருந்தே கவிதைகள் எழுத பிடிக்கும். கவிதைகள் ஏதாவது கிறுக்கி, அதை வைரமுத்து அளவுக்கு நான்கு முறை கரடுமுரடாக படித்து கருத்து கேட்பதால், நண்பர்கள் இப்போதும் என்னிடம் சற்று கவனமாகத்தான் இருப்பர். நமது டி.பி.ஆர். ஜோசப் 'சூரியன்' தொடர்கதை எழுதுகிறார் அல்லவா, அவர் தொடர்கதையின் அத்தியாயங்களுக்கு கவிதைகள் எழுதித் தருவதாக ஒப்புக் கொண்டிருந்தேன். இரு நாட்கள் முன்பு ஆறாம் அத்தியாயத்தை அனுப்பி அதற்கு தோதான ஓர் கவிதை கேட்டிருந்தார். நான் வழக்கம் போல் சோம்பேறித் தனமாக கூகுல் மின்னஞ்சல் பெட்டியை இரண்டு நாட்களாக திறவாமல், இன்றே பார்த்தேன். உடனே அவருக்கு ஓர் கவிதை அனுப்பி வைத்தேன். அது, இங்கே உங்கள் பார்வைக்கு..


சூரியன் முகம் பார்க்காது
தாமரை மலராது தெரியுமா
உன் முகம் பார்க்காமல்
நான் மலர மாட்டேன், தெரியுமா ?

தலைவனும், தலைவியும்
ஊடலோடு காதல் புரியும்
அகநானூற்று கவிதைகள் பலவுண்டு..
எதையேனும் தெரிந்திருப்பாயா ?

தெரிந்திருந்தால்
என்னை முழுமையாய்
புரிந்திருப்பாயோ ??

விளையாட்டாய் புரிந்த செயல்
வினையாய் முடிந்த வருத்தத்தில்
மனதார கேட்கிறேன், மன்னிப்பு
மலர்வாயா, மறப்பேன் என் தப்பு !

தலைவன் ஊரிலில்லாத பொழுது
பசலை நோயில் ஏங்கும்
தலைவி போல், ஏங்குகிறேன்
நான்உன் புறக்கணிப்பால்...

உன்னைக் காட்டிலும் எனக்கு
உன் திறமை பிடிக்கும்...
உன் கர்வம் பிடிக்கும்..
உன் திமிர் பிடிக்கும்..
உன் ஆணாதிக்கம் பிடிக்கும்..
உன் கோபம் பிடிக்கும்..
இத்தனையும் மீறி
உன் நற்குணம் பிடிக்கும்...

இத்தனையும் பிடித்ததாலேயே
உன்னை எனக்கு பிடித்தது...
உன்னையே எண்ணி தவிக்கும்
என்னை பிடிக்குமா, உனக்கு ?

2 comments:

அனுசுயா said...

நன்றாக உள்ளது கவிதை....

பழூர் கார்த்தி said...

நன்றி அனுசுயா...