Thursday, February 26, 2009

கிசுகிசு என்பது தமிழ்ச் சொல்லா??

இன்று மாலை அலுவலகத்திலிருந்து திரும்பும் போது பேருந்தில் பண்பலை வானொலி கேட்டுக் கொண்டிருந்தேன்.

பெரும் மோசடி செய்த பிரபல் ஐடி கம்பெனியின் பேரில் படமெடுத்த ஹீரோவை வைத்து அடுத்த படம் செய்ய யாரும் முன்வரவில்லையாம், அதனால் அவரே சொந்த படம் திரும்பவும் எடுக்கிறாராம்.

சரி அந்த கதையை விடுங்கள்.

கிசுகிசு என்பது தமிழ்ச்சொல்லா? இல்லையெனில், இதற்கு சரியான தமிழ்ச்சொல் என்ன?

துணுக்கு - என்பதற்கான தமிழ்ச்சொல் என்ன?

கேரட் என்ற காய்கறியின் தமிழ்ச் சொல் என்ன? அப்படி ஏதும் இல்லையெனில், ஏன் இல்லை? கேரட், ஆப்பிள், பீன்ஸ் போன்ற காய்கறிகளுக்கு ஏன் தமிழில் பெயர் வைக்க வில்லை?

எல்லோரும் வந்து பதில் சொல்லுங்கள், விவாதிக்கலாம்!!

Wednesday, February 25, 2009

டி-௨0 கிரிக்கெட் - இந்தியா தோற்றது ஏன்?

  • சேவக் - கம்பிர் தொடக்க ஜோடி சரியாக விளையாடி ரன்கள் குவிக்க இயலாதது. கடந்த இரு ஆண்டுகளில், இந்தியா வெற்றிபெற்ற போட்டிகளில், இந்த ஜோடியின் பங்களிப்பு மகத்தானது.
  • இரண்டு போட்டியிலும் டாஸ் தோற்று, இந்தியா ஸ்கோர் சேஸ் பண்ண முடியாமல் போனது.
  • தோனியிடமிருந்து பெரிய அளவில் பங்களிப்பு இல்லை, அவரது டைமிங் இரண்டாவது போட்டியில், படு மோசம், முப்பது பந்துகளில், இருபத்தெட்டு ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது அவரால்.
  • சரியான திட்டமிடல் இல்லாதது. இரு போட்டிகளிலுமே பேட்டிங் ப்ளான் இல்லை.
  • இஷாந்த் ஷர்மா, ஷகீர் கான் கூட்டணி எதிர்பார்த்த அளவில் சோபிக்காதது.
  • ஒரு சரியான ஆல்ரவுண்டர் இல்லாதது.
  • பின் குறிப்பு: சில விமர்சனங்களில், இந்தியாவின் புதிய உடை ராசியில்லை என்று கூறுகிறார்கள். இன்று சுனில் கவாஸ்கர் கூட இதையே கூறி இருக்கிறார். இதை விட அபத்தமான காரணம் வேறெதுவும் இருக்க முடியாது.

Tuesday, February 24, 2009

எங்கே எனது கவிதை??

அருகருகே குடியிருந்தோம்..
நித்தமும்
ஒருவர் முகத்தில் ஒருவர் விழிப்போம்..
வழமையாய் காலையில்
ஒரே மிதிவண்டியில் ஆற்றுக்கு செல்வோம்
செல்லும் போது நீயும்,
திரும்பும் போது நானும் ஓட்டுவோம்,
கேட்டால் எதிர்காற்றில் உன்னால் அழுத்த முடியாதென்பாய்..
என் பேனா மூடியில் பேப்பர் அடைத்து
கொண்டபோது, நீயே தண்ணீர் ஊற்றி எடுத்துத் தந்தாய்..
கிட்டிப் புல் விளையாடும் போது,
நான் எதிரணியில் இருந்தால்,
மெதுவாய் அடிப்பாய் நான் கேட்ச் பிடிக்க வசதியாய்..
ஏதாவது ஒரு பலகாரம் உங்கள் வீட்டில் செய்தால்,
உடனே எனக்கு கொடுக்க ஓடோடி வருவாய்..
உனக்கு ஓர் பம்பரம் வாங்கினால்,
எனக்கும் ஒன்று வாங்கி வருவாய் நான் கேட்காமலே..
வீட்டுப் பாடம் எழுத நேரமில்லா
சில மதிய உணவு இடைவேளைகளில்
எனக்காக நீ அவசரமாய் வாய்ப்பாட்டை சிலேட்டில் கிறுக்குவாய்..
உன் வீட்டிற்கு வரும் உறவினர் குழந்தைகளை
என் வீட்டிற்கும் அழைத்து வந்து
என்னை அறிமுகப் படுத்துவாய்..
பள்ளிக் கூடத்தில் எப்போதும் என்னருகே
அமர்ந்திருப்பாய்..
கோயிலுக்கும், சினிமாவுக்கும்,
சந்தைக்கும், விளையாட்டிற்கும்
நானில்லாமல் எங்கும் தனியாய் சென்றதில்லை நீ..
கல்லூரி பருவத்தில்
வேறிடத்தில் நீ படிக்க நேரிட்ட போதும்,
என்னுடன் தினமும் உரையாடுவாய்.
தினசரி கதைகளை தெரிவிப்பாய்..
இருவரும் நகரத்திற்கு வந்து
வேலையில் சேர்ந்தும் தொடர்பில் இருந்தோம்..
திருமணம், பிள்ளைப்பேறு,
வளைகாப்பு, மகளின் மஞ்சள் நீராட்டு
என வைபவங்கள்
உன் வீட்டிலும், என் வீட்டிலும் நடந்தேறின..
ஒவ்வொன்றிலும் என் ஆலோசனையை கேட்டாய் நீ..
இப்படியாய் நம் வாழ்வு
செவ்வனே சென்று கொண்டிருந்த போது
திடிரென, பூவுலகு எய்தினாய் நீ!!
நண்பா,
இத்தனை நாளாய் தினம் தினம்
பார்த்து, பழகிய உன் அருகாமை இல்லாமல்
வெறுமையாய் நகர்கிறது என் வாழ்வு,
எப்போது நாம் மீண்டும் சந்திப்போம்,
சொர்க்கத்திலோ அல்லது நரகத்திலோ?

Sunday, February 22, 2009

சன் டிவியே, மனசாட்சி இருக்கிறதா??

இன்று (ஞாயிறு) காலையில் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தேன். தர்ம பத்தினியின் தொணதொணப்பு தாங்காமல் (ஹிஹிஹி, எப்போதும் கணிப்பொறியை கட்டிக் கொண்டு மாரடிக்கிறேனாம்), சற்று நேரம் கணிப்பொறியை மூடிவிட்டு, டிவியை ஆன் செய்தேன். நேரம் காலை ஒன்பது ஐம்பத்தைந்து.

சன் டிவியில் டாப் டென் மூவிஸ் ஓடிக் கொண்டிருந்தது. இரண்டாம் இடம் 'வெண்ணிலா கபடி குழு'வை பார்த்து ரசித்தேன். நல்ல படம்தான். அடுத்ததாக முதலிடம் பிடித்த படத்தை காட்டியபோது மிகுந்த அதிர்ச்சி. ஹார்ட் அட்டாக் வந்தது போலிருந்தது, கண்ணீர் கொட்டியது. ஏனென்றால் முதலிடமென் சன் டிவி அறிவித்த படம் 'படிக்காதவன்'.

படு மொக்கையான படம். பல தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டு விட்டது. சன் டிவி பிக்சர்ஸ் வெளியீடு என்பதற்காக என்ன வேண்டுமானாலும் ரேங்கிக் குடுப்பதா? என்ன அநியாயம் இது? எப்படி ரேங்கிங்கை நிர்ணயிக்கிறார்கள்? இப்படித்தான் சில நாட்கள் முன்பு தெனாவட்டு, திண்டுக்கல் சாரதியையும் முதலிடத்தில் அறிவித்தார்கள்.

சன் டிவியே, உனக்கு மனசாட்சியே இல்லையா????

தேன்கூடு திரட்டி என்னானது?

இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் வலைப்பதிவு உலகத்திற்கு வந்திருக்கிறேன். எனது முந்தைய பதிவில் வலைப்பதிவு உலகத்தின் இந்த இரண்டு வருடத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பற்றி வினவி இருந்தேன். அதில் எவரும் தேன்கூடு திரட்டி பற்றி சொல்லவில்லை. யாராவது சொல்லுங்களேன், என்னானது இத்தளம்? 2007ல் தேன்கூடு திரட்டி மிக அருமையாக செயல் பட்டுக் கொண்டிருந்ததே, நிறைய போட்டிகள் எல்லாம் வைத்தார்களே. எங்கே போயிற்று தேன்கூடு?

Saturday, February 21, 2009

அஹம் பிரம்மாஸ்மி ? - நான் கடவுளா? - படம் குறித்த கேள்விகள்

1. ஆர்யா அட்டகாசமாக நடித்திருக்கிறார் அல்லது வாழ்ந்திருக்கிறார், ஆனால் அவரது கேரக்டர் முழுமை பெறாதது போல் தோன்றுகிறதல்லவா?

2. பூஜா, பாலாவின் முந்தைய கதாநாயகிகளையே ஞாபகப்படுத்துகிறார், முக்கியமாக பல இடங்களில், நந்தாவின் லைலாவையே பார்க்கும் படி இருப்பது, படத்தின் பலமா அல்லது பலவீனமா?

3. காவல் நிலையத்தில் நடக்கும் காமெடி காட்சி (மிமிக்ரி, எம்ஜிஆர் - சிவாஜி - நயந்தாரா டான்ஸ்) படத்தில் எவ்விதத்திலும் ஒட்ட வில்லையே?

4. பூஜா பாடுவதாக தோன்றும் சில பாடல்கள், வெவ்வேறு குரல்களில் வருகின்றனவே (வயதான குரல் பாடல்) அவருக்கு பொருந்த வில்லையல்லவா?

5. கிளைமேக்ஸில் பூஜாவின் சிதைந்த முகத்தில் மேக்கப் என்பது அப்பட்டமாக தெரிகிறதே, ஏன் இந்த இடறல்?

6. கடைசி காட்சியில் தாண்டவன் ஏன் தனியாக வந்து சண்டை போடுகிறான், எங்கே அவனது அடிப்பொடிகள், இன்ஸ்பெக்டர்?

இதற்கெல்லாம் பாலாதான் பதில் சொல்லவேண்டும் என்பதில்லை, இதை படிக்கும் நீங்கள் சொல்லுங்களேன்..

Thursday, February 19, 2009

பழைய பதிவர்களெல்லாம் எங்கே??

தமிழ் வலைப்பதிவு உலகத்திற்கு சுமார் இரண்டு வருடங்களுக்கு பிறகு வந்து இருக்கிறேன், 2005-2006 ல் பார்த்து, படித்து பழகிய நிறைய பதிவர்களை தற்போதைய இடுகைகளில் சந்திக்க முடியவில்லை. அவர்க்ளெல்லாம் எங்கே சென்றார்கள், இன்றும் எழுதுகிறீர்களா??

1. கோ. கணெஷ்
2. டி.பி.ஆர். ஜோசப்
3. தருமி
4. துளசி கோபால்
5. ஞான வெட்டியான்
6. டுபுக்கு

இன்னும் பல பதிவர்கள் ஞாபகம் வரவில்லை. இவர்களின் links கொடுக்க முடியுமா?

தேன்கூடு திரட்டி தளம் என்னானது? தமிழ்மணத்தை தவிர வேறு aggregators வந்து பிரபலமாகி உள்ளதா??

போலி பிரச்சினை தீர்ந்து விட்டதா??

தமிழ் வலைப் பதிவில் வேறு ஏதாவது முன்னேற்றங்கள்? Improvements/updates/rules?

தயவுசெய்து சொல்லுங்களேன்...

Wednesday, February 18, 2009

வெண்ணிலா கபடி குழு - விமர்சனம் அல்ல

சென்னை ராமாபுரத்தில் இருப்பவர்களுக்கு மிக அருகே உயர்தர மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் எதுவும் கிடையாது. சத்யம் 12 km, ஐநாக்ஸ் 14 km, மாயாஜால் 30 km. கிண்டியிலோ, போரூரிலோ ஏன் எதுவும் இல்லை?

உதயம் 5 km ல் உள்ளது. இதை விட்டால், சாதாரண ஆனால் நல்ல தியேட்டர் வடபழனி கமலா, சாலிகிராமம் ஏவிஎம் ராஜேஸ்வரி என இரண்டும் உள்ளன.

இதில் கமலா தியேட்டருக்கு மட்டும் online booking வசதி உள்ளது (தற்போதிய படம்: வில்லு). உதயம் தியேட்டரில் வார இறுதியில் புதிய படம் பார்க்க, 2 - 3 நாட்கள் முன்பே நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும்.

ஆனால் அனைத்து மல்டிப்ளெக்ஸ் மற்றும் சாதா தியேட்டர்களிலும் பைக் நிறுத்த Rs 10 டிக்கெட். ஐநாக்ஸில் Rs 15 என நினைக்கிறேன்.

இதை எல்லாம் அலசி ஆராய்ந்து ஏவிஎம் போக முடிவெடுத்தோம். ஒரு ஞாயிறு மாலை முதல் வகுப்பு டிக்கெட் Rs. 40 க்கு வாங்கி சென்றால் அரங்கமே நிரம்பி வழிகிறது. சிறுவர்கள், சிறுமிகள், குழந்தைகள், பெரியவர்கள், மாணவர்கள் என்று கலந்து பட்ட கூட்டத்தில் படம் பார்ப்பதே ஓர் அற்புதமான அனுபவம்.

ஒரு வருடத்திற்கு முன்பு படம் பெயரை கேள்விப் பட்ட போதே படத்தை பார்க்க வேண்டும் என நினைத்து இருந்தேன். படத் தயாரிப்பாளர் ஒரு NRI யாம். எனது நண்பரின் நண்பராம்.

தியேட்டரில் இருக்கைகள் சற்று குறுகலாக உள்ளன. முன் சீட்டுகாரர் தலை மறைக்கிறது. ஆனால் காற்று நன்றாக வருகிறது. சரி, 40 ரூபாய்க்கு புஷ்பேக் சீட்டா கிடைக்கும் என்று சமாதானம் செய்து கொண்டேன்.

சரி படத்திற்கு வருவோம். படம் 35 mm மில் ஆரம்பித்த போது பயந்து விட்டேன், சரிதான் சின்ன பட்ஜெட் படம் என்று 35 mm மில் எடுத்து விட்டார்களா. ஆனால் கொஞ்ச நேரத்தில் ஆய் போகும் பசங்கள் பெரியவர்கள் ஆகும் போது விரியும் ஸ்க்ரீன் அழகு.

ஹீரோவும், ஹீரோயினும் கண்களால் பேசிக் கொள்வதை ரசிக்கலாம். ஒரு சில விமர்சனங்களில், இதை கிண்டல் செய்கிறார்கள். இதுதானே இயல்பு, இப்படித்தானே எங்கள் கிராமத்தில் இப்போதும் இளசுகள் பேசிக் கொள்கின்றன. அது போல் ஹீரோயின் கிராமத்து பெண்ணாயிருப்பினும் வாயாடிக்க வில்லையாம். யார் சொன்னது, எல்லா கிராமத்து பெண்களும் வாயாடிகள் என்று? பாதி கிராமத்து பெண்கள் அடக்கமான, அமைதியானவர்களே, நிறைய வெட்க படுபவர்களே. வேண்டுமானால் எங்கள் கிராமத்திற்கு வந்து பாருங்கள். மேலும் இந்த படத்தில் ஹீரோயின் மதுரை, டவுன் பெண்ணல்லவா.


கபடி ஆட்டத்தை இன்னும் பிரமாதமாய் காட்டியிருக்கலாம். ஒரே பாட்டில் சாதா அணி, சூப்பர் டீம் ஆவது சினிமாவில் மட்டுமே நடக்கும். ஹீரோ இயல்பாய் நடித்து இருக்கிறார். காமெடி நன்றாக இருக்கிறது. யதர்த்தமான கதை, திரைக்கதை. மக்களை குடும்பத்துடன் திரை அரங்கிற்கு அழைத்து வந்திருப்பது இயக்குனரின் வெற்றி.


திருவிழா கொண்டாட்டங்கள் அழகு. ஜாதி பற்றிய வசனங்கள் கைதட்டலை அள்ளுகின்றன. இசை, பரவாயில்லை.

படத்தின் ஊடே வரும் விரசமில்லா காமெடியை வாய் விட்டு சிரித்து ரசிக்கலாம். எல்லோரும் சொல்வது போல் பரோட்டா காமெடிதான் சூப்பர் என்றாலும், மேலும் நிறைய உள்ளன. ஸ்லோ சைக்கிள் ரேசில் படு வேகமாய் ஓட்டும் சீன், உரியடிக்கும் சீனில் மாமியார் மண்டையை உடைப்பது, படாத இடத்தில் பட்டுடப் போகுது என்று மனைவி சொல்லும் இடம், கபடி வீரரின் உறவு முறையை சொல்லும் மதுரைக் காரர் என அமர்க்களப் படுத்தியுள்ளனர்.

கபடி கோச் ஆக வருபவர் அசத்தி இருக்கிறார், "என்னடே சொல்லுதே, நீ ஆடுறியா" என்ற மொழி பிரயோகமும், உடல் அசைவுக்களுமாய் இயல்பாய் நடித்து இருக்கிறார்.

நடுவில் பக்கத்து ஊர் காரர்கள், பழைய பகையை தீர்க்க தண்ணி அடித்து கொண்டு சலம்பி கொண்டிருப்பதை அடிக்கடி காட்டும் போதே தெரிந்து விடுகிறது, அவர்கள் அடிக்க போவதில்லை என்று, இந்த சீன்களை வெட்டி இருக்கலாம்.

வழக்கமாய் துடுக்கு பெண்ணாய் வரும் சரண்யா, இதில் அடக்கமாய் வருவது வித்தியாசமாய், ரசிக்கும் படியாய் இருக்கிறது, well done madam!

கடைசியில் ஹீரோ ஏன் சாகிறார் என்று யாரும் தலையை பிய்த்து கொள்ள வேண்டாம், ஏதோ டைரக்டர் ஆசை பட்டு விட்டார், விட்டு விடுங்கள்.

வெண்ணிலா கபடி குழு - நின்று விளையாடி இருக்கிறது!!!

Tuesday, August 26, 2008

இரு மனங்கள் இணையும் திருமணம்

வாரத்தில் ஏதாவது ஒரு நாளில்
எப்போதாவது ஓரிரு மணித்துளிகள்
சந்தித்து, அவசர அவசரமாய்
நிறைய பேசி, சிரித்து, விளையாடி
சண்டை போட்டு, சமாதானமாகி
சாப்பிட்டு விட்டு பிரியும்
நிலை மாறி
இன்று சற்றேற்குறைய
ஒரு நாளின் இருபத்து நான்கு
மணி நேரமும்
இருவரும் இணைந்தே இருக்கிறோம்!
கணவன் மனைவியாய் இணைந்து
ஆரம்பித்துள்ள இல்வாழ்க்கை
இனிமையாய் தொடர
குறைகளை தவிர்த்து, திருத்தி
நிறைகளை நிரப்பி
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து
மகிழ்ச்சியாய் வாழ
இறைவனை பிரார்திப்போம்!!

Saturday, February 16, 2008

நீ சிரிக்கும் போதெல்லாம் கவிதைகள்!!

கண்ணே
நீ சிரிக்கும் போதெல்லாம்
மணிகள் கலகலவென
உருண்டோடும்
சத்தம் கேட்கிறேனே,
என் காதிலே ஏதும் கோளாறா??

<<>>

கண்கள் சுழற்றும்
நள்ளிரவு
பனி பொழியும்
அதிகாலை
சுட்டெரிக்கும் வெயிலில்
மதியம்
கடற்காற்று வீசும்
மாலை
என
பொழுதுகள் புலர்ந்து
பொழுதுகள் மறைகின்றன..
பேசிக் கொண்டேயிருக்கிறோம்
மின்னஞ்சலில்..
மின் அரட்டையில்..
செல்பேசியில்..
நேரில்..
பேசப் பேச
விஷயங்களுக்கு குறைவில்லை..
கிண்டல்,
கேலி,
மகிழ்ச்சி,
சோகம்,
அதிர்ச்சி,
நிம்மதி
என உரையாடல்கள்
மாறுகின்றன..
உணர்வுகள் மாறுகின்றன..
அன்பும், பாசமும், அக்கறையும்
எள்ளளவும் குறையவில்லை
அந்நாளிலில் இருந்து
இந்நாள் வரைக்கும்..
என்றாவது ஒருநாள்
நம் உரையாடல்கள் நின்றால்
அந்நாளில்
என் உயிரோ அல்லது உன் உயிரோ
பிரிந்திருக்கும்!!!
சொர்க்கத்திலோ, நரகத்திலோ
மீண்டும் சந்தித்துக் கொண்டால்
தொடர்வோம் நம் உரையாடலை!!

<<>>

பனி பொழியும்
அதிகாலையில்
என் அறைக்கு
முன்புள்ள சிறியதொரு
தோட்டத்தில்
மலரும் வெளிர்மஞ்சள்
பூக்கள்
உன் முகத்தை
நினைவு படுத்துகின்றன..
பார்க்கும் போதெல்லாம்
உன்னை நினைத்து
சிரிக்கின்றேன்..
என்றாவது ஒருநாள்
பூக்கள் மலராத தருணத்தில்
சோகம் தழுவுகிறது
உன்னை காணாதது போல்..
பூத்துக் குலுங்கும் மலர்களாய்
நாமிருவரும் அருகருகே
வாழும் தருணம்
வாய்ப்பது எப்போது??

Monday, January 28, 2008

Nokia 5300வுக்காக நான் பட்ட பாடு!

நான் 2003 இல் reliance இல் சேர்ந்தது முதல் ஒரு ஓட்டை(கொஞ்ச நாட்கள் முன்ன வரை அந்த போனைத்தான் லேட்டெஸ்ட் மொபைல் என எங்க ஊரில் பீத்திக் கொண்டிருந்தேன்..) மொபைல் வச்சு இருந்தேங்க!! ஒரு வழியாத 5 வருடம் கழித்து அதை வேரு யாரிடமாவது கொடுத்துவிட்டு புது மொபைல் ஏதாவது வாங்கலாம் என தீர்மானித்தேன்... அதுவும் ஒரு காரணமாகத்தாங்க.. வீட்ல பொண்ணுப் பாத்துட்டு இருக்காங்க..
இந்தக் காலத்து பொண்ணுங்க எல்லாம் nokia N 95,75 series , sony ericsson W,Zseries னு எங்கிலீஷ்ல இருக்கிற அனைத்து எழுத்திலும் எதாவது ஒரு மொபைல் வச்சு இருக்காங்க... அப்படி இருக்கும் போது நம்ம லேட்டஸ்ட் டெக்னாலஜி மொபைலை(????)ப் பார்த்து பையன் ரொம்ப ஓல்ட் டைப் னு நெனச்சு ரிஜெக்ட் பன்னிட்டா என்ன பன்றதுங்கிற பயத்துலத்தான்..

ஒரு மொபைல் வாங்கினதுக்கு ஒரு blogஆன்னு நீங்க யோசிக்கிறது எனக்கு புரிகிறது..... அதுக்கு ஒரு பெரிய காரணம் இருக்குங்க... அதை நீங்க கடைசீல தெரிஞ்சுப்பீங்க

சரி புது மொபைல் வாங்களாம்னு தீர்மானிச்சாச்சு.. ஆன என்ன வாங்கறது,,,
இதை யோசிக்க ஒரு 2 மாசம்.. இன்டெர்னெட், இ-மெயில், நண்பர்கள் என எல்லா வகையிலும் விசாரித்ததில் ரேடியோ, காமரா, இன்டெர்னெட் கனெக்ட் பன்ன டேட்டா கேபில், ப்லூடூத் போன்ற accessories (இதற்கு நிகரான தமிழ் சொல் என்னப்பா?) உள்ள மொபைல் தான் பெஸ்ட் என முடிவு செய்தேன். அதுவும் ஹேண்ட் செட்டுடன் இவை அனத்தும் வந்தால் இன்னும் வசதி. தனி தனியாக செலவு செய்யத் தேவையில்லை. அப்படி ஒரு மொபைலுக்காக வலை வீசினேன்.

ஹேண்ட் செட்டுடன் டேட்டா கேபில் வந்தால், மெமரி கார்ட் வருவதில்லை, மெமரி கார்ட் வந்தால், அது இன்டர்னல் RAM ஆக உள்ளது, extended மெமரி வருவதில்லை. ஆக இருந்த 2 3 ஆப்ஷன்களில் மளிவான (இருப்படிலேயே) விலையில் வருவது நோக்கியா 5300 (அப்பாடா பாடி தலைப்பு வந்து விட்டது) தான் என்று 1000 முறை கன்ஃபார்ம் செய்து கொண்டேன். 5300 ஹேண்ட் செட்டில் 128MB RAM, 1.5MP காமரா, FM ரேடியோ, இலவசமாக டேட்டா கேபில், இயர் ஃபோன், மியூசிச் சிஸ்டத்துடன் இனைக்கும் வசதி என நான் நினைத்த மாதிரியே இருந்தது. சரி நம்ம அடுத்த வேலை மொபைல் வாங்க வேண்டியது தான். ஆனால் எங்கு வாங்குவது?

அதான் TVயில் மணிக்கு ஒரு தடவை "மொபைலா மொபைலா" என பாட்டுப் பாடிக் கொண்டே மாதவன் வந்து univercell தான் பெஸ்ட் மொபைல் பாலஸ் னு சொல்றாரேன்னு அங்கு வாங்குவது என தீர்மானித்தேன்.(நான் பக்கா மாதவன் விசிறியாக்கும்)

நல்ல நேரம், ராகு காலம், எம கண்டம் எல்லாம் பார்த்து (சத்தியமா பார்த்தேங்க) ஒரு ஞாயிற்றுக்கிழமை அடயார் univercell சென்றேன்.

அங்கு சென்ற எனக்கு தூக்கி வாறிப் போட்டது. ஏதொ சென்னை சில்க்ஸோ சரவணா ஸ்டோர்ஸுக்குள்ளோ நுழைந்தது போல் இருந்தது.அவ்வளவு கூட்டம். காலம் ரொம்ப கெட்டுப் போச்சுடாவென்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, நோக்கியா பிரிவை ( motorola, nokia, samsung, sony என்று ஒவ்வொரு brandக்கும் ஒரு தனி பிரிவு) நோக்கிச் சென்றேன்.

ஒரு வழியாய் நோக்கியா கவுண்டரை அடைந்து, விசாரித்ததில் 5300 ஸ்டாக் இல்லை என தெரிய வந்தது. எப்ப வரும் என்று விசாரித்து விட்டு வந்து விட்டேன். ஆனாலும் மனசு கேட்கவில்லை. அதனால் பக்கத்தில்(அடயார், திருவான்மியூர், வேலச்சேரி, மைலாப்பூர்) இருந்த வேறு சில மொபைல் ஷோரூம்களும் விசாரித்ததில் தெரிய வந்த விஷயம் எனக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. 5300 மாடலை நோக்கியா தயாரிப்பதை நிறுத்துவிட்டதாம். இதை கேட்ட எனக்கு 2 நாட்கள் தூக்கம் வரவில்லை. (இதற்கு காரணம் பில்லா படத்தில் வந்த நயந்தாரா சத்தியமா இல்லீங்க) ..

சரி புது மொபைல் வாங்கும் எண்ணத்தை விட்டுவிடலாமா இன்ற யோசித்த பொழுது தான் நண்பர் ஒருவர் motorolaவில் வேலை செய்வது நினைவுக்கு வந்தது. அவர் மூலமாக மோட்டோரேஸர் வாங்குவது என மனசை தெற்றிக்கொண்டேன்.

ஆனாலும் மனசு ஆறவில்லை. அந்த ஒரு வாரம் முழுக்க எங்கு சென்றாலும் எல்லா மொபைல் ஷோரும்களிலும் நுழைத்து 5300 இருக்கிறதா என்று கேட்டு விடுவேன்.
5300 விடும் ஒரு காதலே உருவாகிவிட்ட நிலையில் எங்கும் தோல்வியே எனக்கு மிஞ்சியது. என் மனசோ “அப்படி என்னடா இருக்கிறது அதில் விட்டுத்தான் தொலையேன்” என்றது. ஆனாலும் ஒரு சின்ன நப்பாசை. எங்காவது ஒரு பழைய ஸ்டாக் உள்ள கடையில் கிடைத்துவிடாதா என்று....

அப்படித்தான் ஒரு நாள் நங்கநல்லூருக்கு வேறொரு விஷயமாக சென்று இருந்தேன். அங்கு ஒரு முட்டு சந்து கடையில் நம்பிக்கையே இல்லாமல் 5300 இருக்கிறதா என்று கேட்டேன். அவன் இருப்பதாய் சொன்னவுடன் என்னால் என் காதுகளையே நம்ப முடியாமல் 2 முறை மறுபடியும் கேட்டேன். என்னை செவிடன் என்று கண்டிப்பாய் நினைத்து இருப்பான். அவன் என்ன நினைத்தால் எனக்கென்ன.. எனக்கு தேவை 5300. சரி எவ்வளவு என்று விசாரித்தேன். நான் மற்ற இடங்களில் விசாரித்ததை விட 500 ருபாய் கம்மி. அட! என நினைத்துக் கொண்டு( மனசுக்குள் செகண்ட் ஹேண்டைத் தள்ளி விட்டுடுவானோ என்ற பயம் இருந்தாலும்.. ஸீல்ட் பாக்கட்டில் மொபைலைப் பார்த்ததும் நிம்மதியாய் இருந்தது.) எதாவது discount இருக்கா ஸார் என்றேன் (மனசாட்சி: கொஞ்சம் ஓவரா இல்லை. 5300 கிடைத்ததே பெரிய விஷயம்.இதில் discount ஒரு கேடா உனக்கு). ஆனால் எனக்கு கிடைத்தோ மற்றொரு இன்ப அதிர்ச்சி.
ஷோரூம் ஓனர் : ஸார், discount எதுவும் இல்லை. ஆனால் ஒரு சின்ன ஆஃபர் இருக்கு. அதாவது மொபைலின் மொத்த விலையில் 7% அதிகம் கட்டினால் , 2000 ரூபாய் மதிப்புள்ள் bluetooth இலவசம்.
உடனே மனதிற்குள் கணக்கைப் போட்டேன். 7000 ரூபாயில் (அட..சொல்லவே இல்லைல.அதான் 5300வின் விலை) 7% என்றால் 490 ரூபாய். சரி நமக்கு லாபம் தான் என்று நினைத்துக் கொண்டு...
ஒரு வழியாக 5300வை வாங்கி வீட்டிற்கு வந்ததும் சுகமாய் ஒரு தூக்கம் வந்தது பாருங்க..

என்னுள் ஏதோ பெரிய award வாங்கினது போல் பெருமை.
இருக்காதா பின்ன.. நினைத்தை பெரும் பாடு பட்டு முடித்துவிட்டேன்ல.
(ஹப்பா டா முழு தலைப்பும் வந்து விட்டது.)

Friday, December 14, 2007

நிசப்தமாய் இருக்கிறது என் கவிதைகள்!!


காற்று
வெயில்
குளிர்
பனி
மழை
என எதுவுமே
இல்லாமல்
நிசப்தமாய்
இருக்கிறது
நீ அருகில் இல்லா
வெறுமை
உணர்த்தும் புரிதல்கள்!!

<<>>

உன்
கண்ணில் இருந்து
வெளிவரும்
ஒவ்வொரு கண்ணீர்துளியும்
கீழே விழுமுன்
தாங்குவேன்
என் நெஞ்சில்;
கவலைகளை
கண்ணீராய் வெளியேற்று
என் கண்மணியே!!

<<>>

காத்திருப்பது
மட்டும் சுகமல்ல
காதலில்;
இன்ப துன்பங்களை
பகிர்ந்து கொள்வதிலும்
இருக்கிறது
உளமார்ந்த காதல்!!

<<>>

ஒவ்வொரு நொடியும்
மெதுவாய்த்தான்
நகர்கிறது,
இருந்தாலும் ரசிக்கிறேன்
உன்னை தரிசிக்கும்
கணம் நெருங்குவதால்!!

Saturday, September 08, 2007

புனேவிலிருந்து விடைபெறுகிறேன்...

ஏப்ரல் 16, 2006ம் தேதியிலிருந்து புனேயில் வாழத்தொடங்கிய நான், செப்டம்பர் 11, 2007 அன்று புனேவிலிருந்து விடைபெறுகிறேன். புதிய அலுவலகம் சென்னையில் உள்ளது. 9 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் வசிக்கப் போவது குறித்து மிகுந்த மகிழ்ச்சியாக உணர்கிறேன்.



புனே மிகவும் அருமையான, அமைதியான ஊர். மலைகளுக்கு நடுவில் அற்புதமான க்ளைமேட்டுடன் கூடிய ஊர். போக்குவரத்து, சாலை வசதிகள் மட்டும் கொஞ்சம் குறைவு புனேயில். மற்றபடி அருமையான ஊர். இவ்வுளவு அருமையான ஊரை விட்டு வருவதும், நல்ல அலுவலகத்தை விட்டு வருவதும் சிறு வருத்தத்தை அளித்தாலும், தாய் தமிழ்நாட்டு மண்ணை மீண்டும் தழுவச் செல்வது அவ்வருத்தத்தை மறையச் செய்கிறது.



புனேயில் வசித்து வரும் அனைத்து தமிழ் வலைப்பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி & வாழ்த்துக்கள்!!



மீண்டும் உங்கள் அனைவரையும் சென்னையில் சந்திக்க விரும்புகிறேன், நன்றி & வணக்கம்!!

Wednesday, September 05, 2007

நம்ம ஊர் திருச்சி - பாகம் 3



திருச்சியைப் பற்றிய கடந்த பதிவுகள்

திருச்சி 1
திருச்சி 2


தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளைப் போலவே, திருச்சியிலும் வெயில் அதிகம். வேண்டுமானால் பகலில் வெளியில் அதிகம் சுற்றாமல், சமாளித்துக் கொள்ளலாம்.

சத்திரம் பஸ் ஸ்டாண்ட், மெயின் கார்டு கேட், தெப்பக்குளம், என்.எஸ்.பி ரோடுகளில் நிறைய தரமான உணவுக் கூடங்கள் (ஹோட்டல்கள்) உள்ளன.ரகுநாத், ஆர்ய பவன், வஸந்த பவன், கேரளா மெஸ், பனானா லீப் போன்றவை குறிப்பிடத் தக்கவை.

பிரபல ஆபரணம் மற்றும் துணிக்கடைகள்
சாரதாஸ்
தைலாஸ்
ஆனந்தாஸ்
சென்னை சில்க்ஸ்
கல்யாணி கவரிங்
லஷ்மி ஜுவல்லர்ஸ்
தம்பு (செருப்புகள், பெல்ட்டுகள்)

இப்போது இன்னும் நிறைய கடைகள் வந்து விட்டன. என்.எஸ்.பி ரோடு சென்றால், தரமான துணிகளை நியாயமான விலைக்கு வாங்க வாய்ப்புகள்
நிறைய உள்ளன. அப்புறம் இப்ப திருச்சிக்கு சென்னை சில்க்ஸ் வந்துருச்சு, அதுவும் சாரதாஸ விடாத மக்கள் கூட நகரும் படிக்கட்டு(Esclater) பார்க்குற ஆசையில் துணிய அள்ளிட்டு போறாங்க.

திருச்சியின் நடுவே ஓடும் இரு பெரும் ஆறுகள் காவிரி மற்றும் கொள்ளிடம். மிகப் பிரமாண்டமான ஆறுகள், முழு வேகத்துடன் ஓடுவதை
கல்லணை மற்றும் முக்கொம்பில் ரசிக்கலாம். போன வருடம் பெய்த மழையின் போது இரு ஆறுகளும் நிரம்பி ஓடின என நண்பர்கள் தெரிவித்தனர். வெள்ளமேற்பட்டால் சமாளிப்பது சற்று கடினமே. ஆனால் வருடத்தில் பல நாட்கள் காவிரி, கொள்ளிடம் தண்ணீரே இல்லாமல் இருக்கும்.

பனானா லீப் ஹோட்டல் பற்றிக் கூறும்போது நண்பர் அருண்.சி 'Banana leaf do serve non-veg. Infact i go there only for non-veg. " என்று அந்த ஹோட்டல் அசைவ உணவு வகைகளையும் அருமையாக படைப்பதை நினைவு கூறுகிறார். இந்த ஹோட்டல் ஹோலிகிராஸ் காலேஜ் அருகே மெயின்கார்டு கேட் (பெரிய மலைக்கோட்டை கதவு) எதிரில் உள்ளது.

திருச்சி வெயிலைப் பற்றி நண்பி மலர் கூறும்போது "Trichy veyilum oru sorkkam than ...athu 0 degree kulirla vaduravangalukku than theriyum !!!" என்று பரவசப்படுகிறார். மலர் தற்போது ஜப்பானில் இருக்கிறார். 0 டிகிரியில் இருக்கும்போது, வெயிலின் அருமை புரியுமல்லாவா !

மாம்பழச்சாலை என்ற இடத்தில், உலகின் அனைத்து விதமான மாம்பழங்களும் சீசனின் போது கிடைக்கும். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 நிமிடத்தில் பேருந்தில் (லால்குடி, சமயபுரம், மண்ணச்ச நல்லூர்) சென்று விடலாம். திருச்சியில் கிடைக்கும் சிறப்பான உணவு வகைகளைப் பற்றி வலைப்பதிவர், நண்பர் தேசிகன் "ரமா கபே, ரமணா பேக்கரி, மாம்பழச்சாலை மாம்பழம், காந்தி மார்கேட், வசந்த பவன் பரோட்டா, பாலக்கரை பிரமனந்தா சர்பத் கடை, பிமநகர் மோர்கடை... என்று அடுக்கிக்கொண்டே போகலாம்" என்று நினைவூட்டுகிறார்.

திருச்சியிலுள்ள பிரபலமான கலைக் கல்லூரிகள் சிலவற்றுக்கு பட்டப் பெயர்கள் உண்டு. ஜெயில் - ஜோசப், பியூட்டி - பிஷப், ஜாலி - ஜெமால் என்று கல்லூரிகளுக்கு நிக் நேம் உண்டு என்றும் தேசிகன் சிலாகிக்கிறார். வேறு கல்லூரிகளின்/கல்விக் கூடங்களின் பட்டப் பெயர்கள் தெரிந்தால்,
நண்பர்கள் கூறலாம்.

திருச்சியை பொறுத்த வரை கல்லூரி மாணவர்கள் இரண்டு ஏரியா பஸ்களைப் பார்த்தாலே பரவசப் படுவார்கள். அவை பெல் (BHEL) மற்றும் கே.கே நகர் பஸ்களே. ஏனென்றால் இந்த ஏரியாக்களில்தான் பிகர்கள் அதிகம் (தற்போது எப்படியென்று ட்ரெண்ட் தெரியவில்லை). தனியார் பஸ்கள் நிறைய உண்டு. டிஎஸ்டி, எம்ஆர்ஜி போன்று நிறைய பஸ் நிறுவனங்கள் உள்ளன. பஸ்கள் எல்லாம் புதிதாக, டேப் ரிகார்டர், எப்.ம் என்று கலக்கலாக இருக்கும். உறையூர், தில்லை நகர், பாலக்கரை, ஸ்ரீரங்கம் போன்ற ஏரியாக்களுக்கு நிறைய பஸ்கள் உண்டு. எல்லா ஏரியாக்களுக்கும்
போதுமான பஸ்கள், தொடர்ந்து உள்ளன.

மாலை நேரங்களில், சத்திரம் பேருந்து நிலையத்திலும், என்.எஸ்.பி ரோட்டிலும் கூட்டம் அலைமோதும். ஏகப்பட்டு பிளாட்பார கடைகள் பாப்கார்ன் முதல் பாப் பாடல்கள் சிடி வரை விற்பார்கள். தெப்பக்குளத்தில் இப்போது போட் விட்டிருக்கிறார்கள். இளைஞர்கள் அவரவர்கள் ரேஞ்சுக்கு
டைட்டானிக் ஹீரோ போல் கற்பனையில், போட்டில் மிதக்கிறார்கள். சிந்தாமணி சூப்பர் மார்க்கெட் திருச்சியில் மிகப்பிரபலம். இவர்கள் வைத்திருக்கும் கேண்டீனில் இனிப்புப் போளி (தமிழ்மணம் போலி இல்லீங்கோவ், தின்பண்டம்), ஜாங்கிரி, சமோசா போன்றவைகள் ருசியாக
கிடைக்கும்.

மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் கடை இப்போது திருச்சியில் நிறைய கிளைகளை திறந்துள்ளனர். ஆனால் ஐஸ்கிரிமின் தரம் தற்போது குறைந்து விட்டது என நண்பர்கள் பலரும் வருத்தப்படுகின்றனர்.

RTC Lodge ஹோட்டல் ரவா, வெங்காய ஊத்தப்பம், காபி, கந்தக பூமியின் காட்டமான வெய்யில், Golden Rock Loco shed, 80வயதான ஸ்டேட் பாங்க் ஆலமரம், 117 Infantry Battallion, அமெரிக்கன் ஆஸ்பத்திரி, பாலக்கரை ஆறுமுகம் ஹோட்டல் பரோட்டா, டவுன் ஸ்டேஷன் அய்யர்கடை இட்லி கடப்பா, ஸ்ரீரங்கம் அம்மாமண்டப படித்துறை, வருடமொருமுறை ஸ்ரீரங்கநாதர் வந்துபோகும் நாச்சியார் கோவில், திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோவில்,BHEL என்று திருச்சியைப் பற்றி எழுத நிறைய விஷயங்கள் உள்ளன. ஸ்ரீரங்கத்திலிருந்து ரங்கநாதர் பல்லக்கில் வருடமொருமுறை நாச்சியாரைப் பார்க்க உறையூர் நாச்சியார் கோவிலுக்கு வந்து போவார்.

திருச்சியை பற்றிய விபரங்களை ஓரளவுக்கு தொகுத்திருக்கிறேன். மேற்சொன்ன விபரங்களில் விடுபட்டவை, மாற்ற வேண்டியவற்றை நண்பர்களே, பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். மீண்டும் சந்திப்போம் !

புகைப்படங்கள், இணையத்தில் தேடி எடுக்கப் பட்டன. வல்பென், சுலேகா மற்றும் வேறு சில ஆதாரத் தளங்களுக்கு நன்றி!

Wednesday, August 29, 2007

தமிழ் வலைப்பதிவுகளில் முதன்முறையாய்...

தமிழ் வலைப்புதிவுகளில் முதன்முறையாய் ஒரு Interactive Crime Thriller (ஊடாடும் குற்ற திகில்) சிறுகதையை அனுபவிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன். கதையின் பாதி பகுதி இங்கே இருக்கிறது. இந்த கதையின் முடிவை (climax) கூறப்போவது நீங்கள்தான்.


எனக்கு ராஜேஷ்குமார், சுபா ஸ்டைலில் ஒரு க்ரைம் திரில்லர் எழுத ரொம்ப நாட்களாய் ஆசை. சரிதான் முயற்சிப்போமே என்று சென்ற வருடம் தேன்கூடு போட்டிகளின் போது ஒரு கதையை எழுத ஆரம்பித்தேன். அந்த கதையில் முதல் மூன்று பகுதிகளை கீழே கொடுத்திருக்கின்றேன்.


கதையை முதலில் படியுங்கள். பிறகு கதை எப்படி தொடர்ந்து சென்று முடிந்திருக்கும் என்பதை பின்னூட்டத்தில் 3-4 வரிகளில் எழுதுங்கள். நேரமும், ஆர்வமும் இருந்தால் கதையின் தொடர்ச்சியை தனிப் பதிவாகவும் இட்டு, இங்கே லிங்க் கொடுத்து விடுங்கள்.


Come on, let's interact !!!!


<<<>>>


{{விளையாடாமல் வேட்டையாடு}} - க்ரைம் சிறுகதை



Part - 1


நவிமும்பை வாஷி ட்ரெயின் ஸ்டேசன் அந்த அதிகாலை வேளையிலும் பரபரப்பாய் இருந்தது. கருஞ்சிவப்பு நிறத்தில் வழிந்திருந்த ரத்தம் தண்டவாளத்தை ஒட்டி உறைந்திருந்தது. இரண்டு அடி இடைவெளியில், விழுந்திருந்த இளம்பெண்ணின் சுடிதாரில் ரத்தம் திட்டு திட்டாய் இருந்தது. கம்யூட்டர் டெஸ்க்டாப் ஐகான்கள் போல் மக்கள் சிதறி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.


வாக்கிங் வந்திருந்த பெரியவர் தற்காலிமாக ஆஸ்த்மாவை மறந்து விட்டு "காலம் ரொம்ப கெட்டுக் கிடக்கு.. யாராவது போலிசுக்கு சொல்லுங்கப்பா" என்றார். கூடியிருந்தவர்களில் சிலர் அவசரமாக விலகினர். கேர்ள் ப்ரண்டுக்காக காத்துக் கொண்டிருந்த ஜீன்ஸ் இளைஞன் செல்போனில் "கமான்யா, சீக்கிரம் வாப்பா, பொணமெல்லாம் ஸ்டேசன்ல கிடக்கு, எப்ப ட்ரெயின் எடுக்கப்போறான்னே தெரியல, இன்னிக்கு 'சக்தே இண்டியா' படம் பாத்தாப்பலதான்" என்று அலுத்துக் கொண்டிருந்த நொடிகளில் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள்கள் புடை சூழ வந்தார்.


"போட்டாகிராபர், பாரன்சிக் ஆளுங்க, டாக் ஸ்குவாட் எல்லாரையும் வரச் சொல்லுய்யா.. காலங்காத்தாலயே பொணத்து முகத்துல முழிக்க வேண்டியதா இருக்கு....பேசாம கம்ப்யூட்டர் படிச்சிட்டு, சாப்ட்வேர் கம்பெனில ப்ளாக் எழுதிகிட்டு இருந்திருக்கலாம்.." என்ற இன்ஸ்பெக்டர் குனிந்து கர்சீப்பால் கையை சுற்றிக்கொண்டு ஹேண்ட்பேகை எடுத்தார். வேலை பார்த்த கம்பெனியின் அடையாள அட்டை, கிரெடிட், டெபிட் கார்டுகள், ஸ்டிக்கர் பொட்டுகள், இத்யாதி, இத்யாதி...


கம்பெனி அடையாள அட்டையில் பெயர் பார்த்தார் "வந்தனா ராஜசேகர், Emp Id: 78292"


<<<>>>



Part - 2


பிரகாஷ் லேட்டஸ்ட் ஹிட் பாலிவுட் நடிகையுடன் "கஜுராரே, கஜூராரே..." என்று டூயட் பாடிக்கொண்டிருந்த போது எங்கோ தொலைவில் செல்போன் ரிங்கியது. போர்வையை விலக்கி செல்போனை காதில் வைத்தான். "ஹாய் பிரகாஷ், என்னடா இன்னுமா தூங்கிகிட்டு இருக்க? எந்திருச்சி, ஜிம்முக்கு போடா ராஸ்கல், 10 கிலோ எடையை குறைச்சாதான் உன்னை கல்யாணம் பண்ணிப்பேன்.." என்று வந்தனாவின் குரல் தேனாய் வழிந்தது.


"இதோ எந்திருச்சுட்டேன், எங்க இருக்க இப்ப?" என்றான் பிரகாஷ்.



"வாஷி ஸ்டேசன்ல வெய்ட் பண்ணிகிட்ருக்கேன், 5:12 தானே ட்ரெயின் இன்னும் வரலே.." - வந்தனா



"சரி, கரெக்டா ஆபிஸ் போய்சேரு.. நான் ஜிம்முக்கு கிளம்பறேன்.... வச்சிரட்டுமா..ஒரே ஒரு முத்தம் கொடேன்..." - பிரகாஷ்.



வந்தானாவின் வெட்கப்படும் "போடா, திருட்டு ராஸ்கல்" உடன் கால் கட்டானது.


<<<>>>



Part - 3


ஆறுமுகம் காபி குடித்துக் கொண்டே மும்பை தமிழ் டைம்ஸை பார்வையால் மேய்ந்தார். செல்போன் வைப்ரேஷனில் அதிர்ந்தது. நம்பர் பார்த்தார். புதிதாக இருந்தது. ஏற்கனவே நம்பர் செல்போனில் இருந்தால் பெயர் வருமே என யோசித்துக் கொண்டே எடுத்தார்.


"சார்...வி1 தான் பேசறேன்...வெல்டிங் பண்ணியாச்சு.. இப்ப பன்வேல்ல இருக்கேன்.. ஹைதராபாத் பஸ்லதான் உக்காந்துருக்கேன்...." என்று எதிர்முனையில் குரல் கரகரத்தது.


"...ஏய்.. உன்னை போன் பண்ண வேண்டாம்னு சொன்னேன்ல..." என்றார் ஆறுமுகம். வியர்த்த நெற்றியை தோள் துண்டால் துடைத்தார்.


"இல்ல சார்... நேத்து நைட் வாஷி ஸ்டேசன்ல ஏர்டெல்காரன் ஏதோ விளம்பர ஸ்டால் வச்சி, ஃப்ரியா சிம்கார்டு கொடுத்துகிட்டு இருந்தான்..இதுல 10 ரூவாய்க்கு டாக்டைம் இருக்குன்னான்.. அதான் அந்த நம்பர இப்ப போட்டு உங்கிள்ட பேசிகிட்டு இருக்கேன்.. பேசி முடிச்சவுடனே தூக்கி போட்டுடறேன்"


"சரி சரி.. காலை கட் பண்ணு, ஹைதராபாத் போய்ட்டு 2-3 நாள் கழிச்சி எஸ்டிடீ பூத்ல இருந்து எனக்கு போன் பண்ணு.." என்று கட் செய்தார் ஆறுமுகம்.


<<<>>>



இவ்வுளவுதாங்க.... இப்ப நீங்க அசத்த ஆரம்பிங்க :-)))

என் கேள்விகளுக்கு என்ன பதில்?

1. 'பூங்கதவே.. தாழ் திறவாய்...' என்ற பாடல் இடம்பெற்ற திரைப்படம் எது?

2. சச்சின் டெண்டுல்கர் மொத்தம் எத்தனை டெஸ்ட் சதங்கள் இதுவரை எடுத்துள்ளார்?

3. ஆர்.வெங்கட்ராமன் ஜனாதிபதியாக பதவி வகித்த காலம் எந்த வருடத்திலிருந்து எந்த வருடம் வரை?

4. டைரக்டர் 'ஷங்கர்' இதுவரை எத்தனை படங்களை இயக்கியுள்ளார்?

5. இந்தியா ஒலிம்பிக் ஹாக்கியில் கடைசியாக தங்கம் வாங்கிய வருடம் எது?

6. இந்தியாவில் எந்த மாநிலம் சமீபத்தில், கடைசியாக உருவாக்கப் பட்டது? எந்த வருடம்?

Thursday, August 23, 2007

திருச்சிராப்பள்ளி

திருச்சியைப் பற்றிய எனது முந்தைய பதிவுகள்

திருச்சி 1
திருச்சி 2

திருச்சி நினைவுகள் தொடர்ந்து சுழலும்...

Wednesday, August 22, 2007

திருச்சி - 2




மலைக்கோட்டை மாநகரான திருச்சிராப்பள்ளியைப் பற்றி சென்ற பதிவில் (திருச்சி - 1) பார்த்தோமல்லவா ! மேலும் நிறைய விவரங்களுடன் பல நண்பர்கள் பின்னூட்டமிட்டிருந்தனர். அந்த விவரங்களுடன் மீண்டும் ஒரு முறை திருச்சியைச் சுற்றிப் பார்க்கலாம், வாருங்கள் !

திருச்சியில் இரண்டு பெரிய பேருந்து நிலையங்கள் உள்ளன. சத்திரம் பேருந்து நிலையம் (மெயின் கார்டு கேட்) மற்றும் மத்தியப் பேருந்து நிலையம் (ஜங்சன்). ம.பே.நிலையத்திற்கு அருகே ரயில் நிலையம் உள்ளது. ம.பே.நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் செம்பட்டு விமான நிலையம் உள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களுக்கு பஸ்/டிரெயின் வசதி உள்ளது. சென்னை, மதுரைக்கு விமான வசதிகளும் உள்ளன. இரண்டு பேருந்து நிலையத்திற்கு அருகிலும் நிறைய, நல்ல ஹோட்டல்கள் உள்ளன.



நாகநாதர் டீ ஸ்டால் என்று திருச்சியில் நிறைய டீக்கடைகளைப் பார்க்கலாம். டீ, காபி தவிர வாழைக்காய் பஜ்ஜி சட்னியோடு கொடுப்பார்கள் மாலை நேரங்களில். அவ்வுளவு சுவையாய் இருக்கும். தெப்பக்குளம் பகுதியில், நிறைய ரோட்டோர நூடுல்ஸ் கடைகளைப் பார்க்கலாம். எக் நூடுல்ஸ், வெஜ் நூடுல்ஸ், சிக்கன் நூடுல்ஸ் என்று மக்கள் பிரித்து மேய்வார்கள் (அப்படின்னா, நல்லா சாப்பிடுவாங்கன்னு அர்த்தம்).


திருச்சியில் நிறைய ட்யூசன் செண்டர்கள் உண்டு. பத்தாவது, பன்னிரண்டாவது மாணவர்களுக்கென, மேக்ஸ் செல்வராஜ், பிசிக்ஸ் ஆர்.சி, கெமிஸ்டரி ராஜா, பயாலஜி சுந்தர் என்று ஏரியா, ஏரியாவாக நிறைய பிரபலமான ஆசிரியர்கள் திருச்சியைக் கலக்கிக் கொண்டிருந்தார்கள் (கொண்டிருக்கிறார்கள்).


திருச்சியிலுள்ள முக்கியமான சுற்றுலாத் தளங்கள்


மலைக்கோட்டை, முக்கொம்பு, கல்லணை


முக்கியமான கோயில்கள்


ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவானைக்கோவில் சிவபெருமான், சமயபுரம் மாரியம்மன், குணசீலம் சிவபெருமான், மலைக்கோட்டை தாயுமானவர் & உச்சிப் பிள்ளையார், வயலூர் முருகன்.


முக்கியமான கல்விக்கூடங்கள்


என்.ஐ.டி (NIT, பழைய பெயர் REC)
கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரி
பாரதிதாசன் பல்கலைக் கழகம்

இதைத் தவிர வேறு பல பிரபலமான கலைக் கல்லூரிகளும், பொறியியல் கல்லூரிகளும், கணிணி கல்விக்கூடங்களும் உள்ளன.

திருச்சியில் பிறந்த / படித்த முக்கிய பிரபலங்கள்

முதல் குடிமகன் அப்துல் கலாம் (நான் படித்த ஜோசப் கல்லூரியில் படித்தவர்)
தமிழ் தொண்டாற்றிய கி.ஆ.பெ. விசுவநாதம் (திருச்சியில் பிறந்து, வளர்ந்து, வசித்தவர்)
எழுத்தாளர் சுஜாதா (ஜோசப் கல்லூரி)
முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் (நேஷனல் கல்லூரி)
நடிகர் நெப்போலியன் (ஜோசப் கல்லூரி)
நடிகர் பைவ் ஸ்டார் பிரசன்னா (சாரநாதன் கல்லூரி)
சர்.சி.வி. ராமன் (உறுதியாக தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்)

*****

திருச்சி நினைவுகள் தொடர்ந்து சுழலும் :-)

Tuesday, August 21, 2007

சென்னையின் ப்ளஸ்கள்(+)

சிங்காரச் சென்னையில் செப்டம்பர்-11ம் தேதி கால்பதிக்கின்றேன். 1998-ல் பி.எஸ்.சி முடித்தவுடன் ஹைதராபாத் கிளம்பினேன். ஹைதராபாத்தில் ஐந்தரை வருடங்கள் இருந்து விட்டு மும்பை கிளம்பினேன். ஹைதராபாத்தில் இருந்த நாட்களில் உருப்படியாக எம்.சி.ஏ படித்து முடித்தேன். நவி மும்பையில் இரண்டேகால் வருடங்கள் வாசம். பிறகு ஏப்ரல்-2006ல் புனே வந்தேன். இப்போது இங்கிருந்து கிளம்பி சென்னை மாநகரத்தில் வசிக்கப் போகிறேன்.

நமது அலுவலகம் சென்னை புறநகரில் உள்ளதால் போக்குவரத்து, தண்ணீர் பிரச்சனைகள் அவ்வளவாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

1991-லிருந்து 1998 வரை திருச்சியில் வசித்தேன். இப்போது மீண்டும் 9 வருடங்களுக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு அதுவும் சென்னைக்கு வருவது ஒருவிதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கொஞ்சம் thrilled கொஞ்சம் excited. ஆனால் சென்னையின் தண்ணீர் பஞ்சத்தையும், climateடையும் நினைத்தால் கொஞ்சம் scared.

சென்னைக்கு வருவதால் நான் கருதும் ப்ளஸ்கள் (+)
1. சொந்த ஊருக்கு (கும்பகோணம்) பக்கம், அடிக்கடி சென்று வரலாம். பெற்றோர், உறவினர்களை அடிக்கடி சந்திக்கலாம்.
2. வார இறுதிகளில் கட்டாயம் தமிழ் சினிமா
3. விகடன், குமுதம், குங்குமம், கல்கி, தினமலர், தினத்தந்தி போன்றவற்றை சூடாக படித்து விவாதிக்கலாம்
4. டீக்கடை வெட்டி அரட்டை
5. தாவணி/சுடிதார், மல்லிகைப் பூவுடன் மங்களகரமான/அழகான இளம்பெண்கள்
6. நைட்டு கடைகளில் கொத்து பரோட்டா, குஸ்கா, ஆம்லெட், இட்லி, etc....
7. வலைப்பதிவர் சந்திப்பு, பட்டறை என்று நாமும் நம் பங்குக்கு பட்டையை கிளப்பலாம்

இதைத் தவிர நீங்களும் ஏதாவது + சொல்லுங்களேன்
+ மட்டுமே :-)

Friday, August 03, 2007

தேநீருடன் பருகச் சில கவிதைகள்

1

புதிது புதிதாய்
காதல் கவிதைகள் புனைய
புனைப்பெயரை
தேடி அலைந்த போதுதான்
கண்டேன் உன்னை....
கண்டது முதல்
மறந்தேன்
சொந்தப் பெயரையும்...


2

வலைப்பதிவுகளில் கை
வலிக்கும் வரை
எழுதித் தள்ளி விட்டேன்..
எல்லா போட்டிகளிலும்
கலந்து கொண்டிருக்கிறேன்..
நட்சத்திரமோ,
பரிசுகளோ,
வலை நிறைய பின்னூட்டங்களோ
கைக்கெட்ட வில்லை...
இருப்பினும்
வலை தொடர்வேன் நான்...
தாய்மொழியில் எழுதுவது
சுவாசிப்பது போலல்லவா..
தொடர்ந்து சுவாசிப்பதற்கு
காரணம் வேண்டுமா என்ன?

3

புன்னகைதான் உனக்கு
சிறந்த பொன் நகை
என்று
கூறிக் கூறியே
என் நகைகளையெல்லாம்
ஒவ்வொன்றாய்
களவாடி சென்றாயே...
திருமணமானதும்
திசைமாறிப் போவதா காதல்?

4

மழை பொழியும்
ஓர் பின்னிரவில்
தேநீருடன் பருக
கவிதைகள்
சிலவற்றை தேடி
அலைந்த போதுதான்,
தெரிந்து கொண்டேன்
உன் புகைப்படம்
உணர்த்தும்
எண்ணிலா புரிதல்களை!!!



*****
பின்னூட்டத்தில் உங்களுக்கு பிடித்த கவிதையின் எண் எதுவென்பதை மறவாமல் எழுதுங்கள்!! எதுவுமே தேறாவிட்டால் '0' என்று கூறுங்களேன் :-) இனிமையான வார இறுதிக்கு வாழ்த்துக்கள்!