Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Tuesday, January 26, 2010

நட்சத்திர பதிவாளர் ஸ்ரீதருக்கு, ஆயிரத்தில் ஒருவனின் பதில்கள்

ஆயிரத்தில் ஒருவனை ஏன் ஆதரிக்க வேண்டும்?

ஐயா, இந்த படத்தில் ஆயிரம் குறைகள் இருக்கலாம், இருந்தாலும் ஆதரியுங்கள். இல்லாவிடில் வேட்டைக்காரன்களிடமிருந்தும், ஆதவன்களிடமிருந்தும் தமிழ் சினிமாவை மீட்க இயலாது.

இதோ நட்சத்திர பதிவாளரின் கேள்விகளுக்கு பதில்கள்..

//தனது கடைசி வாரிசைக் காப்பாற்றுவதற்காகவும், சோழவம்சத்தை என்றென்றும் துலங்கச் செய்யவும், நினைக்கும் அந்த சோழ ராஜா எதற்காக பாண்டியரிடமிருந்து அபகரித்த அவர்களின் குல தெய்வச் சிலையையும் இளவலோடு சேர்த்து ஒளித்து வைக்க வேண்டும்? //

சோழருக்கும் பாண்டியருக்கும் ஏற்கனவே இருந்துவரும் பகையால் குலதெய்வ சிலை பாண்டியருக்கு கிடைக்கக் கூடாது என்று ஒளித்து வைக்கிறார்கள். அச்சிலை சோழரோடு இருந்தால்தானே அவர்களுக்கு பெருமை, எனவே சோழ இளவலோடு சிலையையும் எடுத்துச் செல்கின்றனர். மேலும் போரில் தோற்கும்போது வேறு இடத்தில் சிலையை ஒளித்து வைக்க சந்தர்ப்பம் இல்லாது இருந்திருக்கலாம்.

//அப்படியானால் முதலில் போன பிரதாப் ஆராய்ச்சி எதுவும் செய்யப் போகவில்லையா? வியட்நாமிற்கு சென்னையிலிருந்து கப்பலில்தான் போக வேண்டுமா? //

பிரதாப் போத்தன் ஆராய்ச்சி செய்து சோழரின் தீவை அடைந்து விட்டார், ஆனால் அங்கே சிறையில் மாட்டிக் கொண்டார். அவரைத் தேடிச் செல்வதாய் ரீமாசென் கூறினாலும், ரீமாவின் உண்மையான நோக்கம் அங்கே சென்று சோழரை அழிப்பதும், குலதெய்வ சிலையை மீட்பதும்தான். எனவேதான் மத்திய மந்திரியின் செல்வாக்கினாலும், ராணுவ உயர் அதிகாரி துணையுடனும் (இவர்களைனைவரும் பாண்டியர்கள்) பெரும் படையோடும், ஆயுதங்களோடும் செல்கிறார். எனவேதான் கப்பலில் செல்கின்றனர்.

//ஒரு ஆராய்ச்சியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் இராணுவத்தினரின் உயிருக்கு அரசாங்கம் பொறுப்பேற்காது தொல்பொருள் ஆராய்ச்சி திட்டத் தலைவி அறிவிக்க முடியுமா? //

நியாயமான கேள்வி, இந்த வசனமே தேவையில்லை படத்திற்கு.

//ஜெராக்ஸ், மைக்ரோஃபிலிம், எல்லாம் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு அளிக்கப்படாததா? பழைய கால அரிய ஓலைச்சுவடிகளை அப்படியே தூக்கிக்கொண்டு சுற்றுவதுதான் எந்தவகை ஆராய்ச்சி? //

அந்த ஓலைச்சுவடி ஆண்ட்ரியாவுடைய தனிப்பட்ட சொத்து, அதனால் அவர் எடுத்து வருகிறார். மேலும் காட்சியின் நம்பகத்தன்மைக்காக ஓலைச்சுவடியை காட்டுகிறார்கள். ஒருவேளை ஜெராக்ஸை காட்டியிருந்தால் நீங்கள் இதே கேள்வியை 'இவ்வுளவு செலவு செய்து படமெடுப்பவர்கள் ஓர் ஓலைச்சுவடியை காட்ட முடியாதா?' என்று கேட்டிருப்பீர்கள்.


//அப்படி அவர்கள் என்னதான் தொழில் செய்கிறார்கள்? வேளாண்மை, வணிகம், மீன்பிடிப்பது என்று எதுவும் செய்கிறார்களா? //

500 வருடங்களாக மழை பெய்யவில்லை. ஆதாலால் விவசாயமில்லை. இறைச்சியை வேட்டையாடி பகிர்ந்து உண்ணுகிறார்கள்.

//வீர சைவர்களான சோழர்கள் கல்வெட்டு வழக்கில் ‘லிங்க தரிசனம்’ என்றெல்லாம் வாமாச்சார வழக்குகள் பேசுவார்களா? //

ஏன், வீர சைவர்கள் இம்மாதிரி பேசக்கூடாதா? ஆபாசமாக ஒன்றும் பேசவில்லையே, நகைச்சுவையாகத்தானே சொல்கிறார்.

//சோழர்கள் பத்தாம் நூற்றாண்டிலும் கலப்பேயில்லாத சுத்த கருப்பு வண்ணதிலேயே இருக்கிறார்களாமா?//

ஒரு கற்பனைக்காக அப்படி இருக்கக் கூடாதா?

//வியட்நாம் பக்கத்திலிருக்கும் ஒரு ஆதிவாசிக் கூட்டம் கறுப்பாக இருக்கிறது. இன்னொரு ஆதிவாசிக் கூட்டம் சிவப்பு வண்ணத்தில் இருக்கிறார்களே? //

வேறேதாவது பகுதியின் ஆதிவாசிக் கூட்டமாயிருக்கலாம், அல்லது அவர்கள் ஏதேனும் சாயம் பூசிக் கொண்டிருக்கலாம்.

// கொலைசெய்யப் கத்தியோடு பாய்ந்து வரும ஆதிவாசிக் கூட்டத்தைப் பார்த்துவிட்டும் ‘hold fire' என்று சொல்லிக் கொண்டே இருக்கும் இராணுவ கமாண்டருக்கு எங்கே ட்ரெய்னிங் கொடுக்கிறார்கள்? இந்திய இராணுவத்தினரிடம் SLRம், கையெறி குண்டையும் தவிர வேறு ஆயுதமே இல்லையாமா? //

நல்ல கேள்வி, கமாண்டர், ஆதிவாசிகள் சும்மா பயமுறுத்துகிறார்கள் என்று நினைத்திருக்கலாம், கணித்தது தவறாய் இருந்திருக்கலாம்.

இவ்வுளவுதான் எனது பதில்கள். இவை அனைத்துமே நான் யோசித்து, அனுமானப் படுத்தியதுதான். இவற்றிற்கு வேறுவிதமான விளக்கங்களும் இருக்கலாம். எனக்கும் சில கேள்விகள் உள்ளன, சில பகுதிகள் தெளிவாய் புரியவில்லை.

இருப்பினும் நாம் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும், வேட்டைக்காரன்களிடமிருந்தும், ஆதவன்களிடமிருந்தும் தமிழ் சினிமாவை மீட்பதற்காக!!

Sunday, January 03, 2010

அவதார் - இப்படியொரு திரைப்படம் தமிழில் வருமா?

அனைவருக்கும் எனது இதயங் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
இந்த புத்தாண்டில் நான் வழக்கமாய் செய்யும் சிலவற்றை செய்யவில்லை.


1. 31-ம் தேதி இரவு 12 மணிவரை கண்விழித்திருக்க வில்லை. மாலையில் எங்களது அடுக்ககத்தில் (Apartment) சில கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சென்னை புறநகர் காவல்துறை கண்காணிப்பாளர் ஜாங்கிட் வந்திருந்தார். இரவு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்த்துவிட்டு உறங்கி விட்டேன்.

2. புத்தாண்டு முதல் தேதியில் எவருக்கும் தொலைபேசியில் வாழ்த்து சொல்ல வில்லை. என்னை பொருத்த வரை புத்தாண்டின் முதல் நாளும் மற்ற எந்தவொரு நாளைப் போல் சாதாரணமானதே.

3. கோவிலுக்கு செல்ல வில்லை. வீட்டிலேயே கடவுளை வழிபட்டேன்.

<<>>



இன்று மதியம் சத்யம் - சாந்தம் தியேட்டரில் அவதார் திரைப்படத்தை கண்டு ரசித்தோம். டிக்கெட் 120 ரூபாய், இணையத்தில் பதிவு செய்திருந்தோம். தியேட்டரில் 3D கண்ணாடிக்கென 20 ரூபாய் தனியே வாங்கிக் கொண்டனர். இதை டிக்கெட்டுடனேயே வாங்கியிருக்கலாமே என்று தோன்றியது. இணையத்தில் அவ்வசதி இல்லையோ?

அற்புதமான திரைப்படம் அவதார். வித்தியாசமான கதை, விறுவிறுப்பான தெளிவான திரைக்கதை. இப்படியெல்லாம் ஹாலிவுட் திரைஉலகினர் எப்படி சிந்திக்கிறார்கள் என்று பொறாமையும், ஏக்கமும் படவைக்கிறது. பாண்டாரா கிரகம், அதில் வாழும் மனிதர்கள், மிருகங்கள் என கிராபிக்ஸில் புகுந்து விளையாடி உள்ளனர். இப்படம் தயாரிக்க பத்து வருடம் ஆனதாம், அந்த உழைப்பு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.

3Dயில் பார்த்தது ஓர் அற்புதமான அனுபவம். ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு மிஞ்சுகின்றன. பாண்டாரா காட்டில் ஹீரோ ஓடும்போதும், தாண்டும்போதும் நாமும் கூடவே தாண்டுவது போல் உணர்வு ஏற்பட்டது. இப்படியொரு ஆக்-ஷன் திரைப்படத்தில் அழகாக ஒரு காதலையும் சொல்லியிருக்கின்றனர்.

காட்சிகள் ஏற்படுத்திய பிரமிப்பினாலும், மொழி உச்சரிப்பினாலும் எனக்கு ஒரு சில இடங்களில் வசனம் புரியவில்லை, இருந்தாலும் ரசிக்க முடிந்தது. தியேட்டரை விட்டு வெளியே வரும்போது பிரமாண்டமான வேட்டைக்காரன், ஆதவன் போஸ்டர்கள் கண்ணில் பட்டதும் என்னுள் எழுந்தது கழிவிரக்கமா / சோகமா / கோபமா என்று சொல்லத்தெரிய வில்லை.

இப்படியொரு படம் தமிழில் வருமா? ஏன் அறிவியல் / தொழில்நுட்பம் / வானவியல் தொடர்பான திரைப்படங்களை தமிழில் எவரும் தயாரிக்க வில்லை? அதற்கான சூழ்நிலை இங்கே இல்லையா? உலக அளவிலான மார்க்கெட் (viewer ship) இல்லாததுதான் காரணமா?

Sunday, November 29, 2009

கற்றது தமிழ் (மட்டுமல்ல)

இன்று மாலை கலைஞர் தொலைக்காட்சியில் 'கற்றது தமிழ்' திரைப்படத்தை ஒளிபரப்பினார்கள். சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

சில காட்சிகள், வசனங்கள் நன்றாக இருந்தன, இருந்தாலும் ஒரு டாகுமெண்டரி படம் போலத்தான் இருந்தது.

கருணாஸ் ஜீவாவிடம் மாட்டிக் கொண்டு தவிப்பதும், தப்பிக்க வழி தேடுவதும், நண்பரிடம் மொபைலில் பேசுவதும் இயல்பாய் இருந்தது.

ஆனந்தியின் 'நிஜமாத்தான் சொல்றீயா?' வசனமும், காட்சிப் படுத்திய விதமும் அருமை!




மகாராஷ்டிராவில் ஒரு குக்கிராமத்துக்கு ஆனந்தியை தேடிச் செல்வதும் நன்றாக காட்சிப் படுத்தப் பட்டிருந்தது. நானும் முன்பு மகாராஷ்டிராவில் (மும்பை மற்றும் புனே) பணிபுரிந்து கொண்டிருந்த போது ஒரு சில கிராமங்களுக்கு சென்றிருக்கிறேன். ஒரு காட்சியில் மகாராஷ்டிரா மாநில சிவப்பு நிற அரசு பேருந்தை பார்த்தவுடன் எனக்கு நிறைய பழைய ஞாபகங்கள் வந்து அலை மோதின.

படத்தில் தமிழை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள நினைப்பவனையும், அதனை சமூகம் ஏளனப் படுத்துவதையும் காட்டியிருக்கிறார்கள். அக் கருத்து உண்மைதானல்லவா? இன்று தமிழ் மட்டும் படித்தவனுக்கு என்ன வேலை வாய்ப்பு இருக்கிறது. எம். ஏ, எம் பில் தமிழ் படித்தால் ஏதேனும் பல்கலைக்கோ, கல்லூரிக்கோ பேரசிரியாராய் செல்லலாம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவல்லவா? சினிமாவுக்கு பாட்டெழுத தமிழ் பட்டப் படிப்பு தேவையில்லை என நினைக்கிறேன். தமிழ் மட்டுமே படித்து தற்காலத்தில் பிழைக்க முடியாது என்றே கருதுகிறேன்.

ஆதலால் ஏதேனும் தொழில் நுட்ப அறிவு அவசியம் தேவை. பிற மாநில/நாட்டு மக்களுடன் உரையாடுவதற்கு ஆங்கில மொழியறிவும் அவசியம் என்றே கருதுகிறேன்.

தமிழ் மட்டுமே படித்தவருக்கு வேறு ஏதேனும் வேலை வாய்ப்புகள் இருக்கிறதா என்று கூறுங்களேன்!