Thursday, September 01, 2005

மின் அஞ்சல் ரகசியங்கள் Version 2.0

நேற்று வலைப்பதிவிற்கான ப்ளாக் (Blog) தொடங்கியுவுடன் பெரிய எழுத்தாளராகி விட்டோம் என்று ஒரே மஜாவாக இருந்தது. அதே மப்பில் வீட்டிற்கு சென்று, இரவு படுத்த போது வெகுநேரம் தூக்கம் வரவில்லை. ஒருவழியாக தூங்கிய போது கலர் கலராக நிறைய கனவுகள் வந்தன. கனவில் சுஜாதா வந்து பேட்டி எடுத்தார். 'எப்படி இவ்வளவு சுவாரசியமாக எழுதுகிறீர்கள் ? வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன ?' என்று நிறைய கேள்விகள் கேட்டு ஆனந்த விகடன் 'கற்றதும் பெற்றதும்' ல் சிலாகித்து எழுதுவது போலவும், பெங்களூரில் தேசிகன் எனக்கு பாரட்டு விழா எடுப்பது போலவும் கனவுகள் வந்தன. புக்கர் விருது பெறுவதற்குள் தூக்கம் கலைந்து விட்டதால், எழுந்து சென்று விட்டேன் !

நேற்று எழுதிய முதல் பதிவைப் படித்து விட்டு, நண்பர்கள் சிலர் கடிந்து கொண்டனர் (அதாம்ப்பா..கெட்ட வார்த்தையில திட்டினாங்க...). நான் எழுதிய தூய (?) தமிழ் புரிய வில்லையாம். சரி, நம்ம ஸ்டைல்ல பூந்து விளையாண்டுருவோம் என்று இதை எழுத ஆரம்பித்து விட்டேன். அனைவருக்கும் புரியும் படியாக அமைய, ஓரிரு ஆங்கில வார்த்தைகள் நடுவில் வந்தாலும் OK என்பது என் கருத்து.

இந்த பதிவின் பின்வரும் பகுதிகள், ஒரு மாதத்திற்கு முன்பு எழுதப் பட்டவை. இங்கே ப்ளாக் தொடங்கும் முன், முரசு அஞ்சலில் எழுதி, நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்புவேன். அதனை சிறிது திருத்தி Version 2.0 ஆக இங்கே வெளியுட்டுள்ளேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் (அதாம்ப்பா..Comments..) மூலம் தெரிவியுங்கள்!

இளம் வயதிலிருந்து, என் மாமாவிடம் தங்கி படித்ததால், பெற்றோருக்கு அடிக்கடி கடிதம் எழுதுவதுண்டு. காலேஜ் படிப்பு முடியும் வரை போஸ்ட் கார்டிலே எழுதிக் கொண்டிருந்தேன். வேலை கிடைத்து ஹைதராபாத் சென்றதும், இன்லாண்டு கார்டில் எழுத ஆரம்பித்தேன். முதலில் வாரம் ஒரு முறை எழுதத் தொடங்கி பின் மாதம் ஒரு முறை கடிதம் எழுதி அனுப்பினேன்.

பிறகு எனது கிராமத்தில், அடுத்த வீட்டில் போன் வந்த பிறகு, போன் செய்வது அதிகமாகி, கடிதப் போக்குவரத்து குறைந்தது. இருப்பினும் அவ்வப்போது வீட்டிற்கு கடிதம் எழுதுவது நிற்காது.

மும்பை வந்த பின், சில கடிதங்கள் எப்பொழுதாவது எழுதி அனுப்பினேன். மும்பையில் நான் தங்கி இருக்கும் கன்சோலியில் போஸ்ட் பாக்ஸ் இல்லாததால் (அ) போஸ்ட் பாக்ஸ் இருக்குமிடம் தெரியாததால், ஒவ்வொரு முறையும் கடிதத்தை Postbox-ல் சேர்க்க கோப்பர்கைரனே செல்ல வேண்டி இருந்தது. இது கடினமாக இருந்தது. இந்த சமயத்தில், எனக்கு மொபைல் போன் கிடைத்தது. போனில் அடிக்கடி வீட்டை தொடர்பு கொள்ள முடிந்ததால், கடிதம் எழுத அவசியமில்லாமல் போனது. இவ்வாறு நான் கடிதம் எழுதுவது, நின்று போனது.

படிப்படியாக கடிதம் எழுதுவது குறைந்து, நின்று போனாலும், டெக்னாலஜி காரணமாக மின்னஞ்சல் (Email), 1999-ல் எனக்கு அறிமுகமாகியது. நான் முதலில் Internet என்றால் ஏதோ மீனவர்கள் உபயோகப்படுத்தும் வலை என்றும், Email என்பது ஏதோ ஷாக் அடிக்கும் எலெக்ட்ரானிக் சமாச்சாரம் என்றும் நினைத்திருந்தேன். பின் நண்பர்கள் விளக்கியதும், பலரிடமும் Email Account உருவாக்குவது ப்ரீதான் (Free) என உறுதி செய்து கொண்டு, ஒருவாறாக Email Id ஒன்றினை கிரியேட் செய்த போது, ஹைதராபாத்தில் நாய்க்குட்டி கூட Email Id வைத்திருந்தது!

ஆரம்பத்தில் ஒரு ஆர்வத்தில், ஏழெட்டு வெப்சைட்களில் Email Account கிரியேட் செய்து வைத்தேன். ப்ரெண்ட்ஸ¤க்கு ஒன்று, பல கம்பெனிகளுக்கு Resume அனுப்ப ஒன்று, மொட்டை கடிதாசி எழுத ஒன்று. காதல் கடிதங்கள் எழுதுவதற்காகவே ஒரு Id வைத்திருந்தேன்.வாரம் பத்து காதல் கடிதங்கள் எழுதி வனஜா, கிரிஜா, சரிகா என்று மானாவாரியாக அனைவருக்கும் அனுப்பி விடுவேன். இந்த அனுபவங்கள் பற்றி பிறகு இன்னொரு கட்டுரை எழுதலாமென்று இருக்கிறேன், நீங்கள் கெட்ட வார்த்தையில் திட்டாமலிருந்தால்!

இவ்வாறு ஏழெட்டு Idகள் கிடைத்த பிறகு, தெருவில் போவோர், வருவோர் என அனைவரிடமும் Email Address கொடுத்தேன். பேப்பர் போடுபவர், செருப்பு தைப்பவர், காய்கறிக் காரர் என ஒருவர் விட வில்லை. அப்படி இருந்தும், ஒரு மெயில் கூட வர வில்லை. Account deactivate ஆகாமலிருக்க, நானே ஒரு Idயிலிருந்து, எனது இன்னொரு Idக்கு மெயில் அனுப்பி, அதைப் பிறகு Open செய்து, வியப்பேன்.

இது ஒரு பக்கமிருக்க, 13 பக்கத்திற்கு என் Resume தயார் செய்து, தெரிந்த, தெரியாத கம்பெனிக்கெல்லாம் அனுப்பினேன். கனவில் Microsoft, Intel, IBM, Infosys, Wipro என்று எல்லா கம்பெனிகளும் Interviewக்கு அழைத்தன. HR Roundடெல்லாம் முடிந்த பிறகு, பில்கேட்ஸ் என் கையைப் பிடித்து Microsoftல்தான் சேர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். கனவு கலைந்த பின், எழுந்து பல் தேய்த்து, குளித்து, பஸ் பிடித்து ஆபிஸ் சென்று விடுவேன்.

பார்க்கும் வெப்சைட்டில் எல்லாம் பேர் கொடுத்து வைத்ததால், நிறைய Advertisement Mails வர ஆரம்பித்தன. USAவில் எங்காவது Pizza கடை ஆரம்பித்தால் கூட எனக்கு மெயில் வந்தது. உலகத்திலுள்ள எல்லா பேங்குகளும் எனக்கு Credit Card கொடுக்க முன் வந்தன. வாயில் நுழையாத பெயர் போட்டு வந்த மெயில்கள், எனது Bank Account No. கேட்டன. Jane, Sucy, Andy போன்ற மேல்நாட்டுபெண்மணிகள் மெயிலில் என்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடித்தார்கள்.

என்னுடன் வேலை பார்த்தவர்களில், சில பையன்கள் ரவுசு அதிகம் பண்ணுவர். அவர்களுக்காக பெண்கள் பெயரில் மெயில் அனுப்பவதுண்டு. ஆரஞ்சு கலர் பேண்ட் சட்டையில் அம்சமாக உள்ளாய், மீசையை எடுத்து விட்டு, குளிர் கண்ணாடி அணிந்தால் ஹிரித்திக்ரோஷன் போலிருப்பாய் என்று இஷ்டத்துக்கு மெயில் அனுப்புவோம். பையன் அதை நம்பி மறுநாள் ஸ்டைலாக வருவான். Side Poseல் பார்த்தால் தெலுங்கு காமெடி ஹீரோ போலிருக்கும்!

இப்படி இண்டர்நெட் எனக்கு சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக இருந்தது. இவ்வாறாக பற்பல லீலைகள் புரிந்து ஒருவழியாக 2003 டிசம்பரில் மும்பை மாநகர் வந்து சேர்ந்தேன். இன்னும் பற்பல இண்டர்நெட் அனுபவங்கள் உள்ளன. அவற்றை வரும் வாரங்களில் ஒவ்வொன்றாக எழுதுகிறேன். மீண்டும் சந்திப்போம், நன்றி!

10 comments:

Suresh said...

//Account deactivate ஆகாமலிருக்க, நானே ஒரு Idயிலிருந்து, எனது இன்னொரு Idக்கு மெயில் அனுப்பி, அதைப் பிறகு Open செய்து, வியப்பேன்.//

:-)))

Kasi Sheela said...

எப்படிங்க இப்படி காமடியா எழுதுறிங்க

நல்லா இருக்கு

பழூர் கார்த்தி said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி

அதிரைக்காரன் said...

என்னை மாதிரி மேதாவிகள் பயன்படுத்தும் தமிழ்மணத்திற்குள் வந்துட்டீங்க. வேற வழியில்லை வாழ்த்தி வரவேற்பதைத் தவிர.

உங்க ப்ளாக் பேரையே உங்களுக்கு பட்டமாக தர வச்சுடாதீங்க. நல்லா எழுதுங்கப்பூ.

rv said...

நல்லா இருக்குங்க சோம்பேறிப் பையன்..

97-ல உங்கள மாதிரியே முதல்முதலா இமெயில் பார்த்தப்போ யாஹூ, மெயில்.காம், ஹாட்மெயில், இங்கிலாந்து.காம், எக்ஸைட், வாங்-பயே என்பது போன்று ஆரம்பித்த ஐடிக்கள் கணக்கிலடங்காதவை.

அதேபோல் ஜியோசிட்டிஸ்-ல சும்மா ஒரு வெட்டி சைட் நோட்பாடிலேயே பில்ட் பண்ரேன்னு நாள் முழுதும் உக்காந்தும் வீணடிச்சுருக்கேன். அதெல்லாம் ஒரு காமெடி இப்ப நினச்சா சிரிப்பு தான் வருது. முன்னாடி மெயில், tfmdf-ல போச்சு, இப்ப தமிழ்மணத்தில டைம் போகுது.. அவ்ளோதான் :)


//Account deactivate ஆகாமலிருக்க, நானே ஒரு Idயிலிருந்து, எனது இன்னொரு Idக்கு மெயில் அனுப்பி, அதைப் பிறகு Open செய்து, வியப்பேன்.//

இது சூப்பர்!

பழூர் கார்த்தி said...

அதிரைக்காரன் & இராமநாதன், பின்னூட்டத்திற்கு நன்றி.

Cancerian, இந்த '20 ஸெகண்ட்ஸ்' பற்றித்தான் அடுத்த பதிவை போடலாம்னு இருக்கேன் :-)

அன்பு said...

செம ஃபார்ம்ல இருக்கீங்க.... தொடருங்கள்.

b said...

அடப்பாவி மக்கா,

அருமையான நகைச்சுவைப் பதிவு அய்யா. நன்றாகச் சிரித்தேன். வாழ்த்துக்கள் சோம்பேறி.

பழூர் கார்த்தி said...

அன்பு, நன்றி!!

ரொம்ப நாட்களுக்கு பிறகு, இன்றுதான் உங்களுக்கு பதில் சொல்ல நேரம் கிடைத்தது..

<<>>

Asalamone-Bahrain,

நன்றி.. தமிழிலேயே எழுதலாமே..

<<>>

இந்த கடைசி கமெண்ட் (இதற்கு முன்னால் உள்ளது) யாருங்க போட்டது, ஒன்னுமே தெரியலை..

mkr said...

ஒரு மெயில் ஐடியிலிருந்து இன்னொரு ஐடிக்கு மெயில் அனுப்பி...... நமக்கு இந்த அனுபவம் இருக்குப்பா..... நகைச்சுவையாக எழுத வருகிறது.வாழ்த்துகள்